2019ஆம் ஆண்டு தேசிய விருது வென்ற திரைப்படம் 'பாரம்'. இப்படத்தை ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கியுள்ளார். பிப்ரவரி 21 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் வெற்றிமாறன் பேசுகையில், இயக்குநர் ராம்தான் இந்தப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். எஸ் பி சினிமாவிற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். திரையரங்குகளில் எந்தளவிற்கு ஒரு படம் ஓடுகிறது என்பதைப் பொறுத்தே படத்தின் வெற்றி அமைகிறது, இதுதான் தமிழ் சினிமாவின் பலமும் பலவீனமும்.
'விசாரணை' படத்தை தமிழ் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் அந்தப் படம் வெற்றிப் படமாகி நல்ல வசூலும் கிடைத்தது. 'பாரம்' படத்தில் 83 புதுமுகங்கள் நடித்துள்ளனர். படம் விருது வாங்கியவுடனே நிறைய விமர்சனங்களையும் சந்தித்தது. 'காக்கா முட்டை', 'விசாரணை', 'பாரம்' போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற ஊடகங்களின் ஆதரவுதான் முதலில் அவசியம் என்றார்.