தமிழில் இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதைத்தொடர்ந்து பல படங்களில் இசையமைத்த அவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துடன், நினைவில் நிற்கும் பின்னணி இசையையும் தந்துள்ளார்.
இந்நிலையில், 'டார்லிங்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இளைஞர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.
இதற்கிடையில், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து, இசையமைத்துள்ளார். ‘ஜெயில்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளன.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'காத்தோடு காத்தானேன்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
இப்பாடலை தனுஷ் - அதிதி ராவ் ஆகியோர் பாடி இருந்தனர். இந்நிலையில், தற்போது 'பத்து காசு இல்லைனாலும் நட்பூ நம்மை காபந்து (பாதுகாப்பு) செய்யுமே... கெத்துன்னா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ... சிக்கமா நிக்குரப்போ வந்து கைய குத்தாங்கோ' என்னும் பிரண்ட்ஷிப் பாடலை ஆகஸ்ட் 18ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.