இயக்குநர் சுசீந்திரன் சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இதில் சிம்புவுடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்
சிம்புவின் 46ஆவது படமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்தப் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சியென்று சமூக வலைதளப்பக்கத்தில் வெளியானது. அதில் சிம்பு மரத்தில் இருந்து பாம்பை சாக்குப்பையில் போடுவது போன்ற காட்சி வைரலாகி விலங்குகள் நல ஆர்வலர் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தார்.
தற்போது அந்தப் பாம்பு உண்மையானது அல்ல என்றும் பிளாஸ்டிக் பாம்பு என்று சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது.
இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம்.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அலுவலர் கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம்.
அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்றது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.