சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். கரோனா பிரச்னை காரணமாக தற்போது படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கும் நிலையில், வரும் ஏஒரல் மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையே இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான கதை, கதாநாயகனையும் தேர்வு செய்துவிட்டாராம். அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ ராம்சரண் கதாநாயகனாக நடிக்கவைக்க முடிவு செய்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான தனது மற்றப் படங்களைப்போன்று இந்தப் படத்தையும் மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கவும் இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.
'இந்தியன் 2' படத்தின் பணிகள் 60 சதவீதம் முடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தை முழுவதுமாக முடித்தவுடன் ராம்சரண் படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் இயக்குநர் ஷங்கர்.
அதேபோல், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் பிஸியாக உள்ளார் ராம்சரண். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கைவிடப்படுகிறதா 'இந்தியன் 2'?