ஷங்கர் பள்ளி காலங்களிலேயே எல்லோருக்கும் பிடித்த மாணவனாகத்தான் இருந்துள்ளார். மிமிக்கிரி, பாடல் என கலக்கியதால் இவரை சுற்றி எப்போதும் பெரிய நண்பர்கள் கூட்டம் சுற்றிவரும். பின் கல்லூரி காலங்களில் பேருந்தில் செய்த சுட்டித்தனமே பின் நாளில் 'ஊர்வசியாகவும்... சிக்கு புக்கு ரயிலாகவும்' நம்மை இப்போதுவரை ரசிக்கவைக்கிறது.

படிப்பு முடித்து ஒரு நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் (குவாலிட்டி கன்ட்ரோல் சூப்பர்வைசர்) பணியில் சேர்கிறார். ஆனால் சில நாட்களிலேயே நிறுவனத்தில் ஸ்டிரைக் நடக்க, அப்போது கிரேஸி மோகன் எழுதிய நாடகம் ஒன்றை பார்க்கிறார். அதில் வந்த சிறிய நகைச்சுவை வேடத்திற்கு பெரும் கைதட்டல் கிடைக்கிறது. இதைப் பார்த்ததும் அவருக்கு நடிப்பின் மீது பெருகியது.

இதனையடுத்து, அந்த வேலையைவிட்டு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக சேர்கிறார் ஷங்கர். அப்போது அவர் மனதிலிருந்த ஒரே எண்ணம்... எப்படியாவது நடிக்க வேண்டும்; முடிந்தால் ஒரு படத்தை இயக்க வேண்டும் அவ்வளவுதான்! ஆனால் இன்று இந்திய சினிமாவே பிரமித்து நோக்கும் பிரமாண்ட இயக்குநராக வளர்ந்திருக்கிறார்.
இவரது முதல் படம் 'ஜென்டில்மேன்', அதிலும் 'சிக்குபுக்கு ரயிலே' ஏ.ஆர். ரகுமான் இசை வாழ்க்கை பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ரயிலும் கூட. இந்தப் பாட்டுக்காகவே அப்போது மக்கள் திரையரங்கில் குவிய ஆரம்பித்தனர். அப்போது ரசிகர்களிடையே எழுந்த கேள்வி 'யார்றா இது இப்பிடி மிரட்டுறாரு'. இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் 'காதலன்' வருகிறான். அதுவும் அதிரடி ஹிட்!
இப்படி ஹிட் கொடுத்தபின் அவரை திரையுலகம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. அப்போது கசங்கிப்போன சட்டை ஒல்லியான உடல்வாகு என ரொம்ப எளிமையான மனிதராக காட்சி அளித்தார் ஷங்கர். இந்த ஒல்லி உடம்பிலிருந்தா இவ்வளவு பெரிய சினிமா வருகிறது? ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கையில் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறார் ஷங்கர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன்' சினிமாவை இயக்குகிறார். சினிமாவிற்கு வந்து தனது மூன்றாவது படத்தில் கமல்ஹாசனை வைத்து இயக்குகிறார் என்ற செய்தி அப்போது கோலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியது. சிந்திக்கும்போதே பிரமாண்டம்தான். இது முடியுமா முடியாதா என்றெல்லாம் யோசித்ததில்லை. அதனால்தான் 'ஜீன்ஸ்' படத்தில் உலக அதிசயங்கள் அனைத்தையும் ஒரே பாடலில் காட்சிப்படுத்தி ரசிகர்களை அதில் பயணப்படவைக்கும் அனுபவத்தை அவரால் கொடுக்கமுடிந்தது.

ஷங்கர் படங்கள் அனைத்து தரப்பு விஷயங்களையும் பேசும். ஒரு படம் சமூக விஷயத்தை பற்றி பேசும், மற்றொன்று அறிவியல் வளர்ச்சி பற்றி பேசும். இன்னொன்று அரசியல் பற்றி பேசும். வேறொன்று சூப்பர் ஹீரோயிசக் கதையாக இருக்கும். மற்றுமொரு படம் சாதாரணமாக இருக்கும். இப்படி ரக ரகமாக படங்களை கொடுப்பதில் ஷங்கர் கில்லாடி.
மேலும் இவரது திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரமாவது வித்தியாசமான பெயரைக் கொண்டிருக்கும். 'ஜென்டில்மேன்'-அழகர் நம்பி, 'காதலன்'-காகர்லா, 'இந்தியன்'-அமிர்தவள்ளி, 'பாய்ஸ்'-மங்களம், 'அந்நியன்'-ச்சாரி, 'நண்பன்'- பஞ்சவன் பாரிவேந்தன், கொஸாக்ஸி பசப்புகழ் என பெயர் நீண்டுகொண்டே போகும். பிரமாண்ட படைப்புகளை இவர் படைத்தாலும் அதில் சின்ன சின்ன விஷயங்களிலும் தனது தனித்துவம் இருக்க வேண்டும் என்பதாலோ என்னவோ இதுபோன்ற கதாபாத்திரத்திற்கு பெயர் அமைத்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திவருகிறார்.

ஷங்கர் என்றாலே அதிரடி, ஆக்ஷன், பிரமாண்டம், ஃபேன்டஸி என ஒரு இமேஜ் உண்டு. இப்படிபட்ட இயக்குநருக்கு மனதில் நினைத்த முதல் திரைப்படத்தை அவரால் இப்போதுவரை இயக்க முடியாமல் இருப்பதும் ஒரு யதார்த்த உண்மை! இவருடையை முதல் படமான 'அழகிய குயிலே' யதார்த்தமாக வாழ்க்கைக்கு ரொம்ப நெருக்கமாக ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆனால் எந்த தயாரிப்பு நிறுவனமும் அதை வரவேற்கவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அதிரடியாக உருவாகிய படம்தான் 'ஜென்டில்மேன்'. கதை ஓ.கே ஆனது; ஹிட் ஆனது. பின் 'காதலன்', ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’னு அனைத்துப் படங்களும் தெளிவான என்டர்டெயின்மென்ட், பெரிய பிசினஸ், சூப்பர் ஹிட் படங்கள்.

அப்போது 'ஜென்டில்மேன்' இல்லாமல் 'அழகிய குயிலே’ படமாகியிருந்தால் ஷங்கரின் பாதையே வேற மாதிரி இருந்திருக்கலாம். தரமான சினிமா எடுக்க விரும்புகிற திறமையான இளைஞர்களுக்கு எனது தயாரிப்பு நிறுவனம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று ஷங்கரே ஒரு முறை செல்லிருக்கிறார். இப்படி சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்து படம் எடுக்கும் ஷங்கர் தனது முதல் படமான 'அழகிய குயிலே' எடுக்க முடியாமல் போனது ஏனோ அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்ததைப் போன்று அனுபவித்திருப்பார்.

தனது படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை ஆராய்வது ஷங்கருக்கு பிடித்தமான ஒன்று. அப்படி 'அந்நியன்' பட சமயத்தில் சங்கீதத்துடன் ஆர்வம் ஏற்படவே, கர்நாடக சங்கீதத்தை முறையாக ஒன்றரை வருடம் பயின்றார்.
இவர் இப்படி பிரமாண்ட இயக்குநராக வளர்ந்திருந்தாலும் தன்னுடன் பணியற்றிய உதவி இயக்குநர்களையும் கவனிக்காமல் இல்லை. இவருடன் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கின்றனர். அட்லி, பாலாஜி சக்திவேல், வசந்த பாலன் உள்ளிட்டோர் ஷங்கர் படத்தில் உதவி இயக்குநர்களாக பணி புரிந்தவர்களே!

இந்நிலையில் சமீபத்தில்தான் இயக்குநர் ஷங்கர் சினிமா உலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை அவரது உதவி இயக்குநர்களால் கொண்டாடப்பட்டார். சினிமா உலகிற்கு இவர் வந்து 25 ஆண்டுகள் ஆனாலும் இதுவரை 13 படங்களையே இயக்கியுள்ளார். இப்படி தனது படங்களால் சினிமா உலகில் ட்ரெண்ட் செட் செய்த ஷங்கர்... பிரமாண்டங்களின் காதலன்... பாக்ஸ் ஆஃபீஸின் நண்பன்... எளிமையான முதல்வன்!