சென்னை: கடந்த ஆண்டில் ஜீ 5 நிறுவனம் லாக்கப், க / பெ ரணசிங்கம், முகிலன் உள்ளிட்ட படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்தாண்டில் அந்நிறுவனம் மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு வைபவ் - வாணி போஜன் நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும் கே.எல். பிரவீன் படத்தொகுப்பும் செய்கின்றனர். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இது குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ''ஓடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து அனைவரும் அற்புதமாக நடித்துவருகின்றனர்.
வைபவ், வாணிபோஜன், கருணாகரன், நண்பர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கைக்கோப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி’' என்றார்.
நடிகர் வைபவ் கூறுகையில், ''லாக்கப், டானா, கப்பல் போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ஜீ 5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவைப் படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
![director radha mohan announced his new full lengthy comedy movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-radhamohan-film-script-7205221_04022021102950_0402f_1612414790_721.jpg)
குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் ராதாமோகன், வாணிபோஜன், கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.