இயக்குநர் பா ரஞ்சித் - அனிதா தம்பதிகளுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து அனிதா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய். சேய் என இருவரும் நலமாக உள்ளனர். இதையடுத்து தனது குழந்தைக்கு மிளிரன் என்று வித்தியாசமாக அவர் பெயர் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒளிரும் தன்மையை குறிப்பிடும் விதமாக இந்தப் பெயர் அமைந்திருப்பதாகத் அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டகத்தி படத்தில் அறிமுகமான இயக்குநர் பா ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார்.
அம்பேத்கரியம், மார்க்சியம் கொள்கைகளில் மிகவும் தீவர பற்றுடையவராகத் திகழும் இவர், எளிய மக்களின் வாழ்க்கையை தனது படங்களில் பிரதிபலித்துள்ளார். அத்துடன் நீலம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படங்களை தயாரித்துள்ளார்.
இதையடுத்து தற்போது ஆர்யா, கலையரசன், நடிகை துஷாரா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். வட சென்னை பகுதியைச் சேர்ந்து குத்து சண்டை வீரர்களை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஜார்க்கண்ட் பகுதியில் வாழ்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், மக்கள் நாயகனுமான பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கவுள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட்டில் படம் இயக்கும் 'காலா' இயக்குநர்!