தமிழ்த் திரையுலகில் நடிப்பு, நடனம், பாட்டு எனப் பன்முகத் திறமையாளராக அறியப்படுபவர், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு .
1950-களில் தமிழ்த் திரையுலகில் புகழின் உச்சத்திலிருந்த சந்திரபாபு, அந்த காலத்திலேயே சொகுசு பங்களா, மாடியில் கார் பார்க்கிங், வீட்டிற்குள் நீச்சல் குளம் என சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர். திருமணமான அன்றே தனது மனைவிக்கு காதலர் இருப்பதாகக் கூறியதால், அவரை காதலனுடன் அனுப்பி வைத்தவர், சந்திரபாபு.
பின்னாளில் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் பட வாய்ப்புகள் குறைந்து, தனது சொத்துக்களை இழந்தார். அதுமட்டுமின்றி தனது இறுதிக்காலத்தில் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவம் பார்ப்பதற்குக் கூட பணம் இல்லாமல், மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னையில் உள்ள சாந்தோம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி இயக்குநர் மிஷ்கின், தனது உதவியாளர்களுடன் சென்று சந்திரபாபுவின் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் மிஷ்கின், சந்திரபாபுவின் கல்லறையில் அஞ்சலி செலுத்தியன் பின்னணி என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால், மிஷ்கின் விரைவில் சந்திரபாபுவின் காதல் வாழ்க்கையைப் படமாக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.