திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், நடிகர்கள் மோகன்லால், மகேஷ்பாபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களும் #DadasahebPhalkeAward என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளியிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்ததற்கு பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது. மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.
எத்தனை கால கட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எத்தனை உழைப்பு வேண்டுமோ அத்தனை உழைப்பையும் கொடுத்து மக்களை தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன்.
ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.