உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் இருக்கவேண்டும் என அரசும் பிரபலங்களும் கூறிவருகின்றனர். இதையடுத்து, இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதற்கு முன்பு எத்தனையோ தொற்று நோய்கள் வந்தாலும் கரோனா வீரியம் அதிகளவில் பரவக்கூடியது என்பதால் இன்று நாடே முடங்கிக் கிடக்கிறது. இது அனைத்து மக்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நோய்க்கு பயந்து ஓடி ஒளிகிறோம் என்று அர்த்தமில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழி இருக்கிறது. கரோனா என்ற துஷ்டனை கண்டதால் நாம் ஒதுங்கி இருப்பது நல்லது. நாம் தனித்து இருப்பது நம்மை பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல் நம் உறவுகளையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தான்.
இந்த நோய் குறித்து இன்னும் சரியான புரிதல் இல்லாமல் தான் உள்ளோம். ஆகையால் பாதுகாப்பாக இருப்போம் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். அனைவரும் தனித்து பாதுகாப்பாக இருங்கள். இப்போது நாம் பாதுகாப்பாக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும்.
நாம் வீட்டில் இருக்கும் வரை நமது பாதுகாப்பு நம் கையில் இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி விட்டால் நம் பாதுகாப்பு நம்மிடம் இல்லை. கரோனா உங்களைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த நோயை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அனைவரும் வீட்டில் உறவுகளோடு இருப்போம். இல்லத்தில் இருப்போம் இந்தியாவை காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார்.