சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள அரசு நாளை (ஜூன் 17) முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், சினிமா படப்பிடிப்பு இதில் தளர்வு இல்லை. இதனால் திரைத்துறை கலைஞர்கள் பெரும் பாதிப்பை சந்திப்பதாக ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், சினிமா படப்பிடிப்புக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? பால் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அனுமதி, திரைத்துறை சார்ந்தவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படாதது ஏன்? நாங்கள் எப்படி உணவு உண்பது? நாங்கள் எப்படி பால் வாங்குவது? எங்கள் குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது? எப்படி பணம் சம்பாதிப்பது? சினிமா தியேட்டர் போல சினிமா படப்பிடிப்பு இருக்காது. இரண்டு மீட்டர் தூரத்தில் இருந்துதான் ஒளிப்பதிவு பணிகளை செய்கிறோம்.
சினிமா படப்பிடிப்புக்கு தடை நீட்டிப்பதில் என்ன லாஜிக் இருக்க முடியும்? யோசித்து எனக்கொரு முடிவு சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.