கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும், இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். சந்தானத்தோடு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நடிகை அனகா, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
எனர்ஜிடிக் காமெடியன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா எனப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றுள்ளது.
திருச்சியில் திருமணம்
சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் டைம் மெஷினை மையமாக வைத்து, கதை அமைந்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
'டிக்கிலோனா' திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுவிற்கும் ஜூன்.27ஆம் தேதி திருச்சியில் திருமணம் நடந்தது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வைபவம் சிறப்பாக நடந்தது.
திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், திருமணத்தில் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். கரோனா ஊரடங்கு என்பதால் நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், சாம்ஸ் ஆகியோர் இணையவழியில் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
'பலூன்' இயக்குநர் சினிஷ், 'எட்டு தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ், 'மண்டேலா' இயக்குநர் அஸ்வின், 'டோரா' இயக்குநர் தாஸ் ராமசாமி, 'தர்மபிரபு' இயக்குநர் முத்துக்குமார், 'புரூஸ் லீ' இயக்குநர் பிரசாந்த், 'விழா' இயக்குநர் பாரதி பாலா, 'சொன்னா புரியாது' இயக்குநர் ஜெயராஜ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களுடன் 'மாஸ்டர்' திரைப்பட எடிட்டர் ஃபிலோமின் ராஜ், 'மாநகரம்', 'ஜிப்சி' திரைப்பட ஒளிப்பதிவாளர் செல்வா ஆகியோரும் தம்பதிகளை வாழ்த்தினர்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே. ஆர் ராஜேஷ், கிளாப் போர்டு சத்யா, 'டிக்கிலோனா' திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினரும் மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படிங்க: 'டிக்கிலோனா' இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு!