சென்னை: இந்தியில் சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனர்' படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் 'தாராள பிரபு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்து பேசினர்.
'தாராள பிரபு' படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் படம் குறித்து பேசியதாவது:
'விக்கி டோனர்' படத்தை தழுவி எழுதுவது அவ்வளவு சாதரண காரியமில்லை. விந்து தானம் பற்றிய படமானாலும் தப்பான விஷயம் எதுவும் இருக்காது. காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்திருப்பதால் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எமோஷன் காட்சிகளில் நடித்தபோது கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனது கதாபாத்திரத்துக்கு நியாயம் அளித்து நடித்துள்ளேன் என நம்புகிறேன்.
சச்சு, விவேக் போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்தது சிறந்த அனுபவம். விவேக்கிடம் ரஜினி போன்ற ஸ்டைல்களை அதிகமாக பார்த்தேன்.
படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருப்பது தனித்துவமான விஷயமாக அமைந்துள்ளது. இசையை வைத்து படத்தில் பல விஷயங்களை கூற முயற்சித்துள்ளோம். ஒளிப்பதிவாளர் செல்வாவுடன் பணியாற்றியது, எனக்கென தனியான கேமரமேன் கிடைத்த உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் மூலம் ஒரு கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
படத்தின் கதாநாயகி தன்யா ஹோப் பேசியதாவது:
தாராள பிரபு படத்தின் எனது கேரக்டர் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. இதனை மிகவும் அனுபவித்து செய்தேன். ரசிகர்கள் படம் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வமாக உள்ளேன். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மூத்த நடிகையான சச்சு, சிவாஜி ராவ் உள்ளிட்டோரும் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர். காமெடி, காதல் கலந்த படமாக உருவாகியிருக்கும் தாராள பிரபு மார்ச் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எட்டு இசையமைப்பாளர்கள் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆயஷ்மான் குர்ரானா - யாமி கெளதம் நடிப்பில் இந்தியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படம் விக்கடோனர். விந்து தானம் குறித்து கதையம்சத்தில் அமைந்திருக்கும் இந்தப் படத்தின் ரீமேக்காக தாராள பிரபு உருவாகியுள்ளது.