கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் மன அழுத்தப் பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றில் பங்குபெறப்போவதாக நடிகை தீபிகா படுகோன் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இந்நிகழ்ச்சி தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் டெட்ரோஸ் அதனம் கெப்ரயெசஸ் உடன் நடைபெறவிருந்த மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்த கலந்துரையாடல் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த செய்தியை பகிர்வதற்கு வருந்துகிறேன்.
இதுபோன்ற சர்வதேச நோய் பரவல் காலத்தில் மனநலனில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் மனநலனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த கடினமான காலத்தை வெற்றியுடன் கடப்போம்” என தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் தனது ”லிவ் லவ் லாஃப்” நிறுவனம் மூலம் தொடர்ந்து மனநலன் பேணுவது குறித்து பேசிவரும் தீபிகா, மனநலன் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக இந்த வருட தொடக்கத்தில் உலக பொருளாதார அமைப்பின் க்ரிஸ்டல் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நிசப்தம்' வதந்திகளை நம்பாதீர்கள் - தயாரிப்பு தரப்பு