லண்டன்: ஜேம்ஸ் பாண்டாக மற்றொருமுறை நடிகர் டேனியல் கிரேக் நடிக்கலாம் என்று அந்தப் படக்குழுவினர் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
பாண்ட் சீரிஸ் படங்களின் 25ஆவது படமாக 'நோ டைம் டூ டை' உருவாகியிருக்கிறது. வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் ஆக்ஷன், ரெமான்ஸ், சாகச காட்சிகளுடன் அமைந்திருந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பீதியால் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப்போயுள்ளது.
இந்தப் படத்தில் பாண்டாக நடித்துள்ள டேனியல் கிரேக், 'நோ டைம் டூ டை' படத்தையும் சேர்ந்து ஐந்து முறை ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் கடைசி பாண்ட் படம் இதுதான் எனவும், அடுத்த பாண்ட் படத்தில் வேறொரு நடிகர் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.
அத்துடன், முதல் முறையாக பாண்ட் கேரக்டரில் பெண் ஒருவரை நடிக்க வைக்கவும் யோசனை இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மற்றுமொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் சீக்ரெட் ஏஜெண்டாக டேனியல் கிரேக் நடிப்பார் என்று ஹாலிவுட் திரையுலகில் பேசப்படுகிறது.
ஜேமஸ் பாண்ட் கதாபாத்திரத்திலிருந்து டேனியல் கிரேக் விடுபட இருப்பதாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்பெக்ட்ரே' படத்திலிருந்தே பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதுபற்றி வெளிப்படையாக அவர் ஒரு முறையும் கூறியதில்லை. காலம்தான் கடந்துகொண்டிருக்கிறதே தவிர அவர் வாய் திறக்கவில்லை என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தற்போது தெரிவித்துள்ளன.
ஒரு வேளை, 'நோ டைம் டூ டை' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று பாண்ட் சீரிஸ் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்தால், அந்த கதாபாத்திரத்துக்கு வேறொரு நடிகரை வைத்துப் பார்க்க இன்னும் தயாராகவில்லை. எனவே டேனியல் கிரேக் மீண்டுமொரு முறை நடிக்கலாம் என படக்குழுவினர் தரப்பில் கூறுகின்றனர்.
2006இல் வெளியான 'கேசினோ ராயல்' என்ற படம் மூலம் ஜேமஸ் பாண்ட் கேரக்டரில் முதல் முறையாக தோன்றினார் டேனியல் கிரேக். ஒரு முறை பேட்டி ஒன்றில், மீண்டும் பாண்டாக நடிப்பதற்கு பதில் எனது கைகளின் மணிக்கட்டை உடைத்துக்கொள்வேன் என்றார்.
இதேபோல் 2015ஆம் ஆண்டில் பேட்டி ஒன்றில், அடுத்த பாண்டாக யார் நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபோது, அதுபற்றியெல்லாம் எனக்கு தெரியாது. யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். நான் விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பவர்கள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் கவலை என்றார்.
சமீபத்தில் 'நோ டைம் டூ டை' படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி என 10 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!