திரையுலகில் உள்ள முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனது தனித்துவமான நடனத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.
இவர் கடந்த சில நாள்களுக்கு முன், இளைய தளபதி விஜய்க்கு 'ரசிகனின் ரசிகன்' என்ற ஆல்பம் ஒன்றை உருவாக்கி, அவருக்குச் சமர்ப்பணம் செய்தார். அந்த ஆல்பம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு 'அண்ணே வெயிட்டு வெயிட்டு' என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார்.
குறுகிய காலத்தில் திட்டமிட்டு, அந்தப் பாடலை எடுத்து முடித்துள்ளார். சுனில் இசையமைப்பில் பிரவீன் பாடல் வரிகள் எழுத, 'சூப்பர் சிங்கர்' புகழ் திவாகர் இந்தப் பாடலை பாடி இருக்கிறார்.
நடன இயக்குநர் ஸ்ரீதர் கூறுகையில், 'அழகான சிறப்பம்சங்கள் நிறைந்த, இந்தப் பாடலில் சிலம்பம் ஆசான் பவர் பாண்டியன் இணைந்து சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திறமையான கலைஞர்கள், இந்தப் பாடலை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவர்களின் துணையோடு மனநிறைவுடன் உருவாக்கப்பட்டுள்ள, இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.