தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி, தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
2டி என்டர்டெய்ன்மெண்ட் நிர்வாகம் புகார்
இந்த நிலையில், 2டி என்டர்டெய்ன்மெண்ட் பெயரைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நடிக்க வாய்ப்பு தேடுபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிர்வாகத்தினர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆதாரங்களை வைத்து மோசடி செய்த நபரின் இமெயில் ஐடியை வைத்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்
இந்த நிலையில் 2டி தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜசேகர் பாண்டியன் இன்று (ஆகஸ்ட்.27) நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜசேகர் கூறுகையில், "எங்களின் நிறுவனப் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி பலர் விளம்பரங்கள் செய்வதால் இதை யார் செய்கிறார்கள் என்பதைக் கணிக்க இயலவில்லை.
எங்கள் விளம்பரங்கள் அனைத்தும் தங்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும். நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. அதுபோல் வரும் தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பணமோசடி கும்பலிடம் விழிப்புணர்வுடன் இருங்கள்’ - சூர்யா தயாரிப்பு நிறுவனம் ட்வீட்!