கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலித் தொழிலாளர்கள் வருமானமின்றித் தவித்து வருகின்றனர்.
மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காவது அரசு அனுமதி தர வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அக்கோரிக்கையை ஏற்று மே 11ஆம் தேதி முதல் சினிமா, சின்னத்திரையின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என்று மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் (மே 11) திரைத்துறையினர் ஆர்வமுடன் இறுதி கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். எந்தப் படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளன என்பது குறித்த லிஸ்ட் இதோ.
எடிட்டிங் பணியில் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்டர்', விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'சக்ரா' ஆகிய படங்கள் உள்ளன. 'கும்கி 2' ரீ-ரெக்கார்டிங்கில் உள்ளது.
டப்பிங் பணியில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள 'IPC 376', கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பென்குயின்', சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கபடதாரி' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் அனைத்து விதப் பணிகளும் முடிவடைந்து, வெளியிட்டுத் தேதிக்காக தற்போது காத்திருக்கிறது.