கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை அஷ்ரித்தா ஷெட்டி, 2013ஆம் ஆண்டு வெளியான உதயம் என்.எச்.4 படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் 'ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும்', 'இந்திரஜித்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது அவர் 'நான் தான் சிவா' என்னும் தமிழ்ப் படத்தில் நடித்துவருகிறார். இவர் தமிழிலில் அறிமுகமாவதற்கு முன் ஒரு துளு மொழிப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே, நடிகர் அஷ்ரித்தா ஷெட்டியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் காதல் திருமணம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது என்றும் அந்தத் திருமணத்தில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்கின்றனர்.
மேலும் அச்சமயத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெறும் என்பதால் இந்த திருமண நிகழ்ச்சியில் சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனீஷ் பாண்டே, 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். அவர் இதுவரை இந்திய அணிக்காக 23 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணிக்கு தலைமை வகிக்கும் மனீஷ் பாண்டே இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.