லாஸ் ஏஞ்சலிஸ்: 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்துக்காக கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் கிராமம் ஒன்றை உருவாக்க உள்ளாராம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.
தெற்கு இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டுஷைர் பகுதியில் இருக்கும் கைவிடப்பட்ட ஏர்போர்ஸ் இடத்தில் நகரும் விதமாக கிராமம் ஒன்றை உருவாக்க டாம் க்ரூஸ் திட்டமிட்டுள்ளாராம். அங்கு, நடிகர்கள், தயாரிப்பாளர், படக்குழுவினர் என அனைவரும் தங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு, படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் கரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு இல்லை என நம்பப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பணிகள் அனைத்தும் தாமதமடைந்துள்ள நிலையில், தற்போதைக்கு இயல்புநிலை திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணிகளை தொடர வேண்டும் என க்ரூஸுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அனைவருக்கும் ஹோட்டல் ரூம்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலை கருத்தில் கொண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள், படக்குழுவினர் என அனைவரும் ஒரே இடத்தில் தங்குவது என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெனிஸ் நகரில் நடைபெறவிருந்த படத்தின் படப்பிடிப்பு யுகே-வுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கிராமம் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.