சென்னை: ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் டிக்கெட் விலை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'தர்பார்' படத்தின் டிக்கெட் விலை, அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு உயர்த்தி விற்க சென்னை, தமிழகத்திலுள்ள பல்வேறு திரையரங்குகள் திட்டமிட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தேவராஜன் புகார் அளிக்க வந்தபோது கூறியதாவது, விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகளைத் திரையிட அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் 7 காட்சிகள் வரை சில திரையரங்கங்கள் திரையிட திட்டமிட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
'தர்பார்' படத்தை அனுமதியின்றி திரையிடுவதால் அரசுக்கு வரிச்சலுகை பாதிப்பும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பு மற்றும் கூடுதல் காட்சிகள் திரையிடுதல் ஆகியவற்றை தடுக்க வேண்டும் எனவும், சட்ட விதிகளை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.