சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நரேஷ் கோத்தாரி என்பவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். 'பொட்டு', 'செளக்கார்பேட்டை', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வடிவுடையான். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நரேஷ் கோத்தாரியிடம் அறிமுகமாகி விஷாலை வைத்து ரூ.7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக விஷாலிடம் கால் ஷீட் பெற்றுள்ளதற்கான ஆவணங்களைக் காட்டியுள்ளார்.
அதையடுத்து நரேஷ் கோத்தாரி, வடிவுடையானிடம் மூன்று தவனையாக ரூ. 47 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வடிவுடையான் அவர் கூறியப்படி படம் எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த நரேஷ் கோத்தாரி, விஷால் தரப்பில் இது குறித்து கேட்டதற்கு அது போன்ற எந்த கால்ஷீட்டும் வடிவுடையானுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் கோத்தாரி, வடிவுடையான் தன்னை மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.