தமிழ்த் திரையுலகின் நகைச்சுவைப் புயல் நம்ம வைகைப்புயல் வடிவேலு மிகவும் கடினமாக உழைத்து தனக்கென்று தனி இடத்தை அடைந்தவர். அதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்களின் கடவுளாகவும் இவர் இருக்கிறார். புகழின் உச்சியில் இருந்தபோதே விஜயகாந்த் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு எதிராக அரசியல் பரப்புரை செய்தார்.
இவரின் அரசியல் பேச்சே இவரது சினிமா வாழ்க்கையில் அடிசறுக்கியது. இவர் விஷாலுடன் கத்தி சண்டை, விஜய்யுடன் மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையில், சிம்புதேவனின் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படப் பிரச்சினையால் சினிமாவில் நடிக்க தடை போடப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் 'தலைநகரம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் களத்தில் இறங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் தலைநகரம் 'படத்தில் வடிவேலு நடித்த 'நாய் சேகர்' கதாபாத்திரத்தின் பெயரையே படத்தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.