தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி, பாத்திரம், நகை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விற்பனை நிறுவனமாக சரவணா ஸ்டோர்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் பிரபல தமிழ் நடிகைகள் தோன்றினர். ஒரு கட்டத்தில் தமன்னா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நடித்த விளம்பரத்தில் ஒருவர் தோன்றினார். யார் இவர்... காமெடி பீஸாக இருக்கிறாரே என்று அனைவரும் கேட்க தொடங்கினர். பின்புதான் தெரிந்தது... அதில் நடித்தது வேறு யாருமில்ல... சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா அருள்.
தமன்னா, ஹன்சிகா மோத்வானி உடன் சரவணா அருள் நடித்த விளம்பரத்தை பல்வேறு தரப்பில் இருந்து கிண்டலும் கேலியும் செய்தனர். இணையதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஆனால், எதற்கும் அசராமல் அடுத்தடுத்து விளம்பரப் படங்களில் நடித்தார் சரவணா அருள். தற்போது அந்த விளம்பரங்களை பார்க்க மக்களும் பழகிவிட்டனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா உடன் சரவணா அருள், ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்பு இது வதந்தி மட்டுமே என்று நயன்தாரா ரசிகர்களை நிம்மதி கொள்ளச் செய்தது.
விளம்பரப் படங்களில் மாஸ் காட்டிய சரவணா அருள், தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்க கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை தமிழ் திரையுலகில் வெளிவராத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகிகளாக உள்ள மூன்று பேர் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், பிரபலமான மிகப்பெரிய ஒரு இயக்குநர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.