ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (amazon prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin), கமல்ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கடிதம் வாயிலாக ஒன்பது வினாக்களையும் எழுப்பியிருந்தார். இதற்கு சூர்யா அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று ரத்தின சுருக்கமாக பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து சூர்யா வன்னியர் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது திரைப்படம் எந்தத் திரையரங்குகளிலும் ஓட்ட முடியாது எனவும் மறைந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
அதே போல் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி, ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைத் தவறாகச் சித்திரித்ததாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், " 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்ததற்கு இழப்பீடாக ரூ.5 கோடி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக நாளிதழ், ஊடகங்கள் வாயிலாக 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்படும்" என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஜெய் பீம் படத்தை வைத்து வன்னியர் சமூகத்தினர் சூர்யாவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், பா. இரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது ட்விட்டரில் "#WeStandWithSuriya" என்னும் ஹேஷ்டேக்கை கடந்த இரண்டு நாள்களாக ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ட்விட்டரில் சூர்யாவுக்கு ஆதரவு தெரித்து இயக்குநர்கள் பா. இரஞ்சித், வெங்கட் பிரபு, நவீன், கோபி நயினார், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கலையரசன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், உள்ளிட்டோர் "#WeStandWithSuriya" என்னும் ஹேஷ்டேக் வழியாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கவனப்படுத்துவது கலைப் பொறுப்பு; உண்மையான சமூக மாற்றங்களுக்கு அரசு பொறுப்பு - சூர்யா