ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியீட்டுக்காக காத்திருக்கும் திரைப்படம் 'டெனட்'. ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டிஸன் நடித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கூடியிருப்பதற்குக் காரணமே அதன் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் என்பதால்தான்.
இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்தனர். படத்தின் வெளியீடு ஜூலை 17 என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேதி ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
கரோனா தொற்று பரவிவரும் காரணமே திரைப்படங்களின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்புக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் பல திரைப்படங்களின் வெளியீட்டு தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தை திரையரங்கில் வெளியிடத் தயாராக இருந்து, பொது சுகாதார அலுவலர்களும் அனுமதி அளித்தால் திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜூலை மாதம் வெளியாகும் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 15 பில்லியன் ரூபாய்க்கும் மேல் இருந்துள்ளது. இதனால் லாபம் ஈட்டும் நோக்கில் சரியான நேரத்தில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க... தள்ளிப்போகும் நோலனின் 'டெனட்' - ஏமாற்றத்தில் ரசிகர்கள்