நம்பிக்கை சந்துரு இயக்கத்தில், நடன இயக்குநர் சாண்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் '3.33'. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் சாண்டி நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் கெளதம் மேனன், நாயகி ஸ்ருதி செல்வம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3:33 படத்தை பாம்பூ ட்ரீ புரெடக்ஷன் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.
அதில், சாண்டி, ஸ்ருதி செல்வம், சந்துரு, ஜீவதா உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர்.
பிரபுதேவா போல் ஆக ஆசை
அப்போது சாண்டி, “நாயகனாக 3:33 எனது முதல் படம். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதைகள் கேட்டேன். ஏதாவது சீரிஸாக பண்ணலாம் என யோசித்து கொண்டிருந்த போது இயக்குநர் சந்துரு என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னார்.
அவர் என்னிடம் கதை சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது. அந்த இடத்தையே ரணகளமாக்கி நடித்து காட்டி கதை சொன்னார். அவர் கதை சொல்லி முடித்த பின் அந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என யோசித்தேன்.
ஆனால் சந்துரு இந்த கதைக்கு நான் தான் நடிக்கனும் என்றார். இந்தப் படத்தின் உண்மையான நாயகன் சந்துரு. அவர் நடித்து காட்டியதில் 50 விழுக்காடுதான் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். சந்துரு இயக்குநராக மட்டுமல்லாது அவருக்குள் ஒரு நடிகனும் இருக்கிறான்.
நான் நடிக்கிறேன் எனச் சொன்னபோது எனது நண்பர்கள், நலம் வரும்பிகள் பலர் அது வேண்டாம் என்றார்கள். சினிமாவில் நீங்கள் நடன இயக்குநராக மட்டும் இருங்கள் எனக் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் எனக்கு பிரபுதேவா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வரவேண்டும் என்பது தான் ஆசை. 3:33 மொத்த படத்தையும் ஒரு வீட்டிற்குள்ளேய வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள்” என்றார்.
இப்படம் என் வாழ்க்கை
தொடர்ந்து இயக்குநர் சந்துரு, “3:33 சொந்த முயற்சி என்பதால் யாரை வைத்து செய்யலாம் என யோசித்த போது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயங்கி தான் போனேன். ஆனால் கதை கேட்டு முடித்தப்பின் என்னை கட்டியணைத்து சாண்டி பாராட்டினார்.
இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை என்னிடம் இப்போது பணம் இல்லை உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்து விட்டேன்.
கௌதம் மேனன் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ஆள் வேண்டும் என நினைத்தேன். அதற்காக கெளதம் மேனை அணுகினேன். அவரும் கதை கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றார்.
எல்லோரும் திரையரங்கில் பாருங்கள்
அதன்பின் ஸ்ருதி செல்வம் கூறுகையில், சந்துரு கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். இப்படத்திற்கு தூணாக இருந்தது தயாரிப்பாளர் ஜீவிதா கிஷோர்.
இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி என்றார்.
இறுதியாக ஜீவிதா கிஷோர் கூறுகையில், " இது முழுமையான ஹாரர் படமாக இருக்கும். சாண்டியிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது. அவர் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். கௌதம் மேனன் மிகப்பெரும் ஒத்துழைப்பு தந்தார் என்றார்.