வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு சிம்பு இந்தப் படத்துக்கான தேதிகளை வழங்கியுள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி, இதன் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 'மாநாடு' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முழுக்க முழுக்க கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்து பேசி இந்த முடிவில் சிறிது மாற்றம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி இதன் முதற்கட்ட படப்பிடிப்பில் பாதியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். சமீபத்தில் ரஜினி - சிவா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் மற்றும் அஜித்தின் 'வலிமை' உள்ளிட்ட படங்கள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.