இயக்குநர், அரசியல் பேச்சாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கரு.பழனியப்பன். சமீபத்தில் வெளியான 'நட்பே துணை' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு இளைஞர் பட்டாளத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரிக்கும் 'கள்ளன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்டை சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக கரு.பழனியப்பன் நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகிறார்.
இயக்குநர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எழுத்தாளர் சந்திரா, 'கள்ளன்' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படம் குறித்த அனுபவத்தை இயக்குநரும், எழுத்தாளருமான சந்திரா கூறுகையில், 'கதை, கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் இயக்குனர் கரு.பழனியப்பன். மிகவும் உணர்வுபூர்வமாக இந்தப் படத்தை இயக்கியிருப்பது மேலும் நம்பிக்கையை தருகிறது.
‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்து தான் வாழ்வைத் தொடங்கினான். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை. பரந்து விரிந்த நிலவியலும் காடுகளும் ரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைத் தரும். கே-யின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும்.
'கள்ளன்’ படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார், யுகபாரதியும், ஞானகரவேலும் எழுதியுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்று அவர் தெரிவித்தார்.