விஷ்வா, மிருணாளினி, சௌமிகா, மனோஜ், நரேன், ஸ்டன்ட் சிவா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, டி. ராஜேந்தர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் மனோஜ் பேச்சு:
படம் குறித்து நடிகர் மனோஜ் பேசுகையில், இந்தப்படம் நடக்க இயக்குநர் சுசீந்திரன் தான் காரணம் என்றார். மேலும் ஒரு இரைச்சலான காபி ஷாப்பில் தனக்கு இயக்குநர் கதை சொன்னதாகத் தெரிவித்த மனோஜ், அந்த இடத்தின் இரைச்சலை மீறி ஒருவர் ஈடுபாட்டோடு கதை சொல்கிறார் என்றால், அவருக்கு அந்த கதை மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கும் எனக் கேட்ட மனோஜ், அதற்காகவே தான் நடிக்க ஒத்துக்கொண்டதாகக் கூறினார்.
இயக்குநர் டி. ராஜேந்தர் பேச்சு:
சமீபகாலமாக தான் எந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் தான் ஒதுங்கியிருந்ததாகவும் தெரிவித்த டி. ராஜேந்தர், சுரேஷ் தன்னை அன்பால் அழைத்தார் எனவும்; அதனால் தான் விழாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று, அடமாக இருந்தவர் பாரதிராஜா எனக் கூறிய ராஜேந்தர், அவரைப்போல் தானும் இருந்ததாகத் தெரிவி்த்தார். மேலும் தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று தாங்கள் பட்ட பாடு போதும், இனி வரும் தலைமுறை பிழைத்துக் கொள்ளட்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தைப்போல் இந்தப்படமும் ஜெயிக்கும் என்று வாழ்த்தினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு:
தனக்கு விருப்பமானவர்கள் மேடையில் இருக்கிறார்கள் என தன் பேச்சைத் தொடர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், இயக்குநர் பாரதிராஜா, டி. ராஜேந்தர் ஆகியோரது படங்கள் தனக்குப் பிடிக்கும் எனக் கூறினார். அவர்கள் இருக்கும் மேடையில் தானும் கலந்து கொண்டதற்குப் பெருமை படுவதாகக் கூறிய விஜயபாஸ்கர், இயக்குநர் சுசீந்திரன் தரமான படங்களைத் தரும் கலைஞர் எனவும் இயக்குநரைப் பாராட்டினார்.
இயக்குநர் பாரதிராஜா பேச்சு:
இயக்குநர் சுசீந்தரன் தனக்குப் பிடித்த கலைஞன் என்று கூறிய பாரதிராஜா, பாண்டிய நாடு படத்தில் முதலில் நடிக்க தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றார். ஆனால், அந்தப்படம் தனக்கு ஒரு கம்பேக்காக இருந்தது எனவும் தெரிவித்தார். சுசீந்திரனின் படங்கள் எல்லாமும் நன்றாக இருக்கும் எனக் கூறிய பாரதிராஜா, அவரின் படங்களைப் பார்த்து படம் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை, அவரைப் பார்த்தே சொல்லிடலாம் என்றார். இந்தப்படம் அவருக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் என்று கூறி தனது வாழ்த்துகளை பாரதிராஜா பதிவு செய்தார்.

நடிகர் நரேன் பேச்சு :
சுசீந்திரன் படங்களுக்குத் தான் ரசிகன் எனக் கூறிய நடிகர் நரேன், அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகக் கூறினார். சுசீந்தரன் ஒரு அருமையான நடிகர் என்ற நரேன், அவர் சொல்லிக்கொடுப்பதை நடித்தாலே போதும் என்றார். மேலும் படத்தில் வேலை பார்த்த எல்லோருக்கும் தனது வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.
இயக்குநர் சுசீந்திரன் பேச்சு:
இந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை எனத் தெரிவித்த சுசீந்திரன், அரோல் கரோலி அருமையான பின்னணி இசை தந்திருக்கிறார் என்று கூறினார்.
மேலும் நரேனிடம் 10 நாள் எனச் சொல்லி நிறைய நாட்கள் வேலை வாங்கியதாகத் தெரிவித்தார். அதை அடுத்த படத்தில் சரி செய்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் நடிகர் மனோஜுக்கு இந்தப்படம் ஒரு கம்பேக்காக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்னிக்கு சூப்பர் ஸ்டாருக்கு ஸ்டார் பிறந்த நாளாம்ல!