களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்ச நட்சத்திரமாக விளங்கும் உலக நாயகனுக்கு மேலும் ஒரு கவுரவம் காத்திருக்கிறது. கலையுலக ஜாம்பவானாக உலக நாயகனாக முடிசூடிய இந்த கலைஞன் சினிமா, கலாசாரம், கலை ஆகியவற்றில் அளித்துவரும் பங்களிப்பைப் பாராட்டி ஒடிசாவின் சென்சுரியன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இன்று ஒடிசா சென்சுரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்கி கவுரவிக்கிறார்.
![Kamal Haasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5108809_kamal.jpg)
இதற்காக ஒடிசா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினமே முதலமைச்சர் நவீன் பட்நாயக்கினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன், மூன்று முறை இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள் (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா) 18 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது (1990), சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம், பத்ம பூஷன் விருது, தென் இந்திய நடிகர்களிலேயே முதன்முதலாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமை உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்.
![Kamal Haasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5108809_kamal3.jpg)