திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஆகஸ்ட் 19) அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே, கரோனா தொற்றில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைய வேண்டி, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டு பிரார்த்தனை நடைபெற இருப்பதாக பாடகர் ஹரிஹரன், குணச்சித்திர நடிகர் மனோபாலா ஆகியோர் அறிவித்துள்ளனர். இதில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக பின்னணி பாடகர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாம் மேற்கொள்ளும் இந்த கூட்டு பிரார்த்தனை மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும். இந்த பிரார்த்தனையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து குணச்சித்திர நடிகர் மனோபாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டு வர இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடத்த இருக்கிறோம். இதில் அனைவரும் பங்கேற்று எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.