தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர்களான துணை நடிகர்கள் பெஞ்சமின், திம்மராசு, சிங்காரவேலன் ஆகியோர் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக மனுதாக்கல் செய்தனர். அதில், "உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் சங்கத்தின் சட்ட விதிகளை மீறி நடந்திருப்பதால் இந்த தேர்தலில் பல உறுப்பினர்கள் தபால் ஓட்டு போட முடியவில்லை. தபால் ஓட்டு போட்டவர்களின் ஓட்டுக்கள் ரகசியத் தன்மையும் தேர்தலில் காப்பாற்றப்படவில்லை.
மனுதாரர்களுக்குத் தேர்தல் நாளுக்கு முதல் நாள் வரை தபால் ஓட்டு கிடைக்காததால், வாக்கு மையத்திற்கு நேரில் வாக்களிக்கச் சென்ற பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதனால் நடைபெற்று முடிந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.