பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத், எம் மகன், வெயில், வானம், கடுகு, ஸ்பைடர், பொட்டு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளிதாஸ்' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளம் மூலம் கடந்த ஆண்டு உலகையே அதிர வைத்த 'புளூ வேல்' என்ற தற்கொலைக்கு தூண்டும் கேம் உள்ளிட்டவற்றை கதையம்சமாக கொண்டிருக்கும் கிரைம் திரில்லராக காளிதாஸ் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் நடிகர் பரத் காவல்துறை அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஸ்ரீசெந்தில் இயக்கும் இந்தப்படத்திற்கு ஜில் ஜங் ஜக் படப்புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். லீப்பிங் ஹோர்ஸ் எண்டர்டெயின்மென்ட், இன்கிரடிபிள் புரொடக்ஷன், தினா ஸ்டுடியோஸ் சார்பில் மணி தினகரன், எம்.எஸ்.சிவநேசன், வி.பார்கவி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
பரத் தற்போது தமிழில் 8, நடுவன் மற்றும் மலையாளத்தில் 6 ஹவர்ஸ், க்ஷணம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.