கரோனா தொற்று காரணமாக நேற்று( ஆகஸ்ட் 10) லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் மரணமடைந்தார்.
இவரது மறைவு குறித்து திரையுலகினர் தங்கள் வருத்தத்தையும், இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தி, “சில நேரங்களில் என் மகிழ்ச்சிகளையும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன், அதேபோன்று எனது துக்கங்களை பகிரும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ஒரு நல்ல கம்பெனி, மூன்று தயாரிப்பாளர்கள். இவர்களின் தயாரிப்பில் நான் 'கண்களால் கைது செய்' படத்தை இயக்கி இருக்கிறேன்.
இந்நிலையில், எனது பாசத்திற்கும் நட்பிற்கு உரிய சுவாமிநாதன் கரோனா தொற்று காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இந்தச் செய்தி என்னை மிகப்பெரிய ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தக் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பது தெரியவில்லை. இருந்தாலும், ஒரு நல்ல தயாரிப்பாளரையும் நண்பரையும் இழந்துள்ள துக்கம் எனக்கு உள்ளது.
அவரின் குடும்பத்திற்கும், குடும்பத்தை சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.