அமராவதி: தெலுகில் இன்று வெளியாகியிருக்கும் 'வால்மிகி' படத்தை அனந்தபூர் மாவட்டத்தில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தின் தெலுகு ரீமேக் 'வால்மிகி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் நடிகர் அதர்வா, வருண் தேஜ் உள்ளி்ட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மூலம் தெலுகில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் அதர்வா.
இந்த நிலையில், 'வால்மிகி' என்ற படத்தின் தலைப்புக்கு ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் அதிகளவில் வசித்துவரும் குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன் படத்தின் ஷுட்டிங் அங்கு நடைபெற்றபோது படத்தின் தலைப்புக்கும் ஹீரோவின் கதாபாத்திரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி அவர்கள் இடையூறு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது அங்கு படம் திரையிடப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கருதிய மாவட்ட நிர்வாகம், 'வால்மிகி' படத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் இதைப் பின்பற்ற வேண்டும். மீறானால் அபராதம் விதிக்கப்படும் என்று தடை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.