'குற்றம் 23' படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இணைகிறது. அருண் விஜய்யை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். தற்காலிகமாக 'ஏவி 31' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவத்துக்காக விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது. கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ரெஜினா கஜண்ட்ரா, ஸ்டெபி பட்டேல், கவதி பெருமாள் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது.
இது குறித்து அறிவழகன் கூறுகையில், 'குற்றம் 23' படத்துக்கு பின் மீண்டும் அருண் விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதை. கண்டிப்பாக இது பேசப்படும் என்றார்.
இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறுகையில், என் நீண்ட கால நண்பரான அருண் விஜய்யின் கடின உழைப்பையும், சீரான வளர்ச்சியையும், நான் நன்கு அறிவேன். இயக்குநர் அறிவழகனைப் பொறுத்தவரை புதுமையான திரில்லர் வகை பட முயற்சிகளில் புதிய சிகரங்களைத் தொட முயற்சிப்பவர்.
இவ்விருவரும் இணைந்த 'குற்றம் 23' படம் பல மொழிகளின் திரைக்கலைஞர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்த இரட்டையர்களுடன் நான் இணைவதில் பெருமைப் படுகிறேன் என்றார்.