'துருவங்கள் பதினாறு' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாள்களாக வெளியிடப்படாமல் இழுபறியில் இருந்துவரும் படம் 'நரகாசூரன்'.
இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட், ஆன்டிராகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
'துருவங்கள் பதினாறு' படத்தைப் போன்று திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 2018 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படம் சில சிக்கல்களால் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே கார்த்திக் நரேன் அவரது மூன்றாவது படமான 'மாஃபியா சாப்டர் 1' படத்தின் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். இப்படத்தில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், 'நரகாசூரன்' படம் எப்போது வெளியாகும் என சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கார்த்திக் நரேன் பதிலளித்துள்ளார்.

அதன்படி, 2020 மார்ச் மாதம் உறுதியாக 'நரகாசூரன்' படம் வெளியாகும் எனத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக 'மாஃபியா சாப்டர் 1' படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.