நடிகை அனுஷ்கா, மாதவன் ஜோடியாக 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.
ராஜமௌலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் மூலம் அனுஷ்கா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை. 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார்.
அண்மையில் வெளிநாடு சென்று உடல் எடையைக் குறைத்தார். உடல் எடையைக் குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் அட்டைப் படத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடிக்கவிருக்கிறார். ‘திரில்லர்’ மற்றும் மனோதத்துவக் கதையில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறது. இவர்களுடன் ‘ஹாலிவுட்’ நடிகர் மைக்கல் மேட்ஸன், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடிக்கின்றனர்.
அனுஷ்கா இதுவரை எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தபோதும் இந்த ‘சைலன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.