உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப் தன் வயதுக்கேற்ப கதை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
கடந்த செவ்வாய்கிழமை உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், குடும்ப உறுப்பினரை தவிர மற்ற யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சனுக்கு 1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின் போது அவருக்கு ரத்தத்தில் ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் தொற்று ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் அமிதாப் பச்சன் சினிமா, விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறு சுறுப்பாக இயங்கிவந்தார்.
இதையும் வாசிங்க: இந்திய சினிமாவின் 'காட்பாதர்'!