மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகப் நடித்துள்ளவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். இவர் தற்போது தமிழில் 'தாய்நிலம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
இவர் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துள்ள "பக்ஷிகளுக்கு பறயான் உளது’"(பறவைகள் சொல்ல நினைப்பது ) படத்தை சுதா ராதிகா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பஹாமாஸ் நாட்டில், உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பறவை ஆராய்ச்சியாளராக டாக்டர் அமர் ராமச்சந்திரன் நடித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் அமர் ராமச்சந்திரன் கூறுகையில், "பஹாமாஸில் அதிலும் பெண்கள் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது.
நான் ஏற்கனவே நடித்து, தயாரித்திருக்கும், தாய்நிலம் திரைப்படம், இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்கத் தயாராகி வருகிறது. ஒரே வருடத்தில் என்னுடைய இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது" என்று டாக்டர் அமர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.