சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதிமுதல் 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் உலக நாடுகளிலிருந்து பல மொழிகளில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவிலிருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகியிருந்தது. அதில், தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட 'அமலா' திரைப்படமும் தேர்வாகி இருந்தது.

'அமலா' திரைப்படத்தை இயக்குநர் நிஷாத் இப்ராஹிம் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீகாந்த், அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர், குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ இசையில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படம் திரையிடப்பட்ட சில நொடிகளிலேயே ரசிகர்களை இருக்கையின் நுனியில் இருக்கவைத்தாகப் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் படத்தில், ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் நகரில் இருக்கும் ஒரு பூங்காவில் இறந்துகிடக்க அது கொலையா, தற்கொலையா? என்று காவல் துறையினர் குழம்பியிருக்கின்றனர்.
அப்போது காவல் துறை உயர் அலுவலராக வரும் ஸ்ரீகாந்த் இது கொலைதான் எனக் கூற காவலர்களும் துப்புதுலங்க ஆரம்பிக்கின்றனர். அதே நேரத்தில் அதே நகரில் வேறொரு இளம்பெண் இறக்கும் தருவாயில் ஸ்ரீகாந்த் அந்தப் பெண்ணை காப்பற்ற முற்படுகிறார். ஆனால் அந்தப் பெண்ணோ 'அமலா' எனக் கூறி உயிர்விடுகிறாள்.

இப்படிப் புரியாத புதிராக இருக்கும் வேளையில், சீர்திருத்த பள்ளியிலிருந்து ஒரு சிறுவன் தப்பித்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது. தப்பித்த சிறுவன் யார்? அவனுக்கும் இந்தக் கொலைகளுக்கும் எதும் தொடர்பு இருக்கிறதா? என்ற முடிச்சுகளை அவிழ்ப்பதே மீதிக் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்தனர்.