போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, பூஜையைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் நீண்ட நாள்களாகியும் வராத காரணத்தால், அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர்.
டிக்-டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன் என, பல தரப்பினரிடம் அஜித் ரசிகர்கள் 'வலிமை அப்பேட்' கேட்ட நிகழ்வு தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து மதுரை அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்டு போஸ்டரையும் ஒட்டினர். ஒரு கட்டத்தில், கடவுள் முருகனிடமே 'வலிமை' பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியளித்தனர்.
ரசிகர்களின் இச்செயலால் கடுப்பான அஜித் அறிக்கை விடும் அளவிற்கு, இப்பிரச்னை பூதாகரமானது.
கடந்த மே 1ஆம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என, படத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில், சில காரணங்களால் அதுவும் தள்ளிபோனது.
இதனால் அஜித் ரசிகர்கள் விரக்தியடைந்தனர். இந்த நிலையில், விஜய்யின் தளபதி 65 படமான 'பீஸ்ட்'டின் ஃபர்ஸ்ட் லுக் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியதால், அஜித் ரசிகர்கள் மீண்டும் அப்டேட் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டனர்.
இதையடுத்து மீண்டும் சமூக வலைதளத்தில் வலிமை பட அப்டேட் தலை தூக்கியுள்ளது.
எஞ்சியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் சென்னையில் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட தயாரிப்பு தரப்பு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:முதல்முறையாக 'வலிமை' பட பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட யுவன்