சென்னை: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகையர்ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களுக்கு சைமா விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
சிறந்த நடிகை தேர்வுக்காக இரண்டு சைமா விருதுகள்
இதில், தமிழில் வெளியான க/பெ. ரணசிங்கம், தெலுங்கில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான இரண்டு விருதுகளை ஐஸ்வர்யா ராஜேஷ் தட்டிச் சென்றார்.
தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படமானது, கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது.
படத்தில் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று உயிரிழந்த கணவனின் உடலை, தாயகம் கொண்டு வர முயற்சிக்கும் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்திருப்பார். இதில், அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு காண்போரை கண்கலங்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும்.
ரஹ்மான் பாணியில் ஐஸ்வர்யா
தெலுங்கில் வெளியான 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.
இதில், வேறொரு பெண்ணால் ஈர்க்கப்பட்ட கணவனை மீண்டும் அடைய, ஐஸ்வர்யா ராஜேஸ் மாடர்ன் வேடமிட்டு கணவனிடம் கதறி அழும் காட்சி காண்போர் நெஞ்சை ரணமாக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
மேற்கண்ட திரைப்படங்களுக்காகவே ஐஸ்வர்யா ராஜேஸ் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாணியில், ஒரே விழா மேடையில் இரண்டு சைமா விருதுகளை வென்ற ஐஸ்வர்யா ராஜேஸுக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: 'சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்'- கமல்ஹாசன்