கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. சமீப காலமாக திரை பிரபலங்கள் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று(ஜன.09) நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் "தளபதி" படத்தில் நடித்த ஷோபனா, தற்போது நாட்டியப் பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.அதில், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். முதல் நாளில் இருந்த உடல் பாதிப்பு பின்னர் குறைய தொடங்கியது. தடுப்பூசி 85 விழுக்காடு பயனளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : 'புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது' - விஷ்ணு விஷால் உருக்கம்