நடிகை மீரா மிதுன் சமீப காலமாக விஜய், சூர்யா குடும்பத்தை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசி வருகிறார். இதற்கு ரசிகர்கள் தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை பலரும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் மீரா மிதுனின் செயலை எதிர்த்து, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஷாலு ஷம்மு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட மீரா, ஷாலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீரா மிதுன் தன் மீது ஆசிட் அடிப்பேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக ஷாலு ஷம்மு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ஷாலு ஷம்மு கூறியதாவது, "மீரா மிதுன், சமீபகாலமாக சூர்யா, விஜய் குடும்பத்தை அவதூறாகப் பேசியது குறித்து நான் அவரை கண்டித்து வீடியோ வெளியிட்டேன். இதனால் மீரா மிதுன் என்னுடைய செல்போன் எண்ணை அவரது ஆதரவாளர்களிடம் வழங்கி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் உடனே மீரா மிதுன் மற்றும் அவரது மாஃபியா கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.