சென்னை : பிரபுதேவாவுடன் ’அள்ளித்தந்த வானம்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. இவருடைய இயற்பெயர் பூர்ணிதா. ஜெயம் ரவியின் ’ஜெயம்’ படத்தில் கதாநாயகி சதாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டார் என்றே சொல்லாம்.
பொதுவாக பல படங்களில் கதாநாயகிக்கு தங்கையாக நடிப்பவர்கள் மக்களிடையே நன்கு அறியப்படுவது அரிது. ஆனால் இந்தப் படத்தில் அக்காவின் காதலுக்கு உதவும் தங்கையாக நடித்து நன்கு அறியப்பட்டார். இவருடைய க்யூட் ரியாக்ஷன்ஸ் பலரையும் கவர்ந்தது. இந்தப் படத்தில் ’அட்லக்காவுக்கு மட்லலேரியா தான்’ என இவர் சொல்லும் இந்த வசனம் மிகவும் பிரபலம்.
’சின்ன பட்டணம் எல்லாம் கட்டணம், கைய நீட்டினால் காசு மழை கொட்டணும்’ என்ற பாடல் வரிகளைக் கேட்டாலே அனைவருக்கும் கல்யாணிதான் நினைவுக்கு வருவார். பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடிய இந்தப் பாடல் 90ஸ் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம்.
இவர், 'இன்பா', 'கத்திக்கப்பல்', 'இளம்புயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்துவந்தார். பின் 2013ஆம் ஆண்டு ரோஹித் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இவர் இன்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : விஜய்சேதுபதியின் 'கடைசி விவசாயி' ட்ரெய்லர் வெளியீடு!