90’ஸ் கிட்ஸ்களின் செல்ல கதாநாயகியாக இன்றளவும் இருப்பவர் தேவயானி. 1994ஆம் ஆண்டில் கே.எஸ்.அதியமான் இயக்கிய 'தொட்டா சிணுங்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மார்டன் பெண்ணாக தமிழ் சினிமா பயணத்தைத் தொடங்கிய அவர் தான் பிற்காலத்தில் குடும்பப் பெண் கதாநாயகியாக வலம் வந்தார்.
1996இல், வெளியான 'காதல் கோட்டை' படம் தேவயானிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் அஜித்துக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருந்தது. இந்தப் படத்தில் முகம் பார்க்காமல் கடிதங்கள் மூலமாக மட்டுமே அஜித்தை காதலிக்கும் சிறிய நகரப் பெண்ணாக அவர் நடித்திருந்தார்.

அடுத்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'நீ வருவாய் என' திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் 'பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா' பாடல் சமீபத்தில் கூட ட்ரெண்டானது.
இந்தப் படத்தை இயக்கிய ராஜகுமாரனை பின்னாளில் தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தேவயானி நடித்த சூர்ய வம்சம் திரைப்படம் அவருக்கு ஓர் மைல்கல் என்றே சொல்லலாம். அந்தப் படத்தில் வரும் நட்சத்திர ஜன்னலில் எனும் ஒரே பாடலில் ஓகோவென வளர்ச்சியைக் கண்டிருக்கும், சின்ராசு என்னும் கதாபாத்திரம்.
சின்ராசிவின் மனைவி நந்தினியாக ரயிலில் புறப்படும் தேவயானி, நந்தினி ஐ.ஏ.எஸ் ஆக மீண்டும் திரும்பும் காட்சி மீம் கிரியேட்டர்களின் பசிக்கு இன்றும் சிக்கும் அவல்.
இந்தக் காட்சிச் சீரியஸாக சித்தரிக்கப்பட்டாலும் உண்மையிலேயே இந்தப் படத்தில் வரும் நந்தினி கதாபாத்திரம் அவருடைய வாழ்க்கைக்கும் பொருந்திப் போனது.

தன் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரனுக்கு மிகப்பெரிய பக்கப்பலமாக விளங்கும் தேவயானி அவரின் நம்பிக்கை வெளிச்சமாகத் திகழ்கிறார்.
அப்பு, அழகி, ப்ரெண்ட்ஸ், கும்மிப்பாட்டு, பாட்டாளி என இதுவரை சுமார் 80 திரைப்படங்கள், 8 சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் நீங்கா இடம் பிடித்த தேவயானி எந்தப் படத்திலும், சீரியலிலும் ஆபாசமாக நடித்ததில்லை.
சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் எனும் சீரியலில் தேவயானி நடித்து வருகிறார். கைம்பெண்ணாக இந்த சீரியலில் நடிக்கும் தேவயானிக்கு குடும்பம்தான் எல்லாம்.

அவ்வளவாக படப்பிடிப்பு கிடைக்காத பட்சத்தில் தேவயானி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி விடுகிறார்.
இன்று அவருக்கு 47ஆவது பிறந்தநாள். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கிராமத்து வாழ்க்கையை இப்போது முழுமையாக அனுபவிக்கிறேன்' - தேவயானி