சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த கேரள நடிகை சித்ரா, நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சித்ரா நடித்துள்ளார். இந்தப் படங்களை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமான சித்ரா, தன் முதல் படத்திலேயே தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் இருவருடனும் அறிமுகமான பெருமையைப் பெற்றவர் ஆவார்.
தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் படங்களில் ஒன்று ’அவள் அப்படித்தான்’. 1978ஆம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் சித்ரா கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். தமிழின் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவரான ருத்ரய்யா இயக்கிய ஒரே படமான ’அவள் அப்படித்தான்’ படத்தில், நடிகை ஸ்ரீப்பிரியாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் சித்ரா நடித்திருப்பார்.
மேலும், இயக்குநர் இமயம் பாலச்சந்தரின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான கையளவு மனசிலும் சித்ரா மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இத்தொடரை அடுத்தே சின்னத்திரையில் அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது.
சித்ராவின் உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சித்ராவை விடாமல் துரத்திய '21'... சொல்லப்படாத கதை!