'கற்றது தமிழ்' திரைப்படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்,அஞ்சலி. அதில் 'நெஜமாத்தான் சொல்றீயா' என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதைப் பார்த்து ரசிகர்கள் மயங்கிப் போனார்கள்.
இதனையடுத்து 'அங்காடித் தெரு' படத்தில் ஜவுளிக் கடையில் பணியாற்றும் சாதாரணப் பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். குடும்ப சூழ்நிலைக்காக சென்னைக்கு வந்து, வேலை செய்யும் இடத்தில் எப்படி எல்லாம் பெண்கள் சிரமப்படுகிறார்கள் என்பதைக் கச்சிதமாக நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்திருப்பார் அஞ்சலி.
அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஜவுளிக் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் சிரமத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காண்பித்திருப்பார்.
மார்டன், கிராமத்துக்காரி என்று எந்த ரோல் கொடுத்தாலும் தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கிறார். இதற்கு உதாரணமாக, 'தரமணி' படத்தில் அவரை இயக்குநர் ராம் கிராமத்துக்காரியாகவும், மார்டன் உடையிலும் காண்பித்து இருப்பார்.
இதனையடுத்து 2011ஆம் ஆண்டு வெளியான, 'எங்கேயும் எப்போதும்' படத்தில் தனது காதலன் மீது ஆளுமை செலுத்தும் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார், அஞ்சலி. பொதுவாகவே, அவரது பேச்சில் ஆளுமை சாயல் இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுவதால், இப்படத்தில் அவருக்கு நடிப்பது மிகவும் எளிதாகவே இருந்திருக்கக்கூடும். ஆந்திரா மாநிலத்தின் ராஜமுந்திரியைப் பூர்வீகமாகக் கொண்டாலும் இவர் பேசும் தமிழ் மற்ற நடிகைகள் மத்தியில் திரும்பிப் பார்க்க வைக்கிறது.